பெங்களூருவில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல் அடக்கம்
உடல் நலக்குறைவால் உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடலுக்கு ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு:
ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் (வயது80) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதல்-மந்திரி பவசராஜ் பொம்மை உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஆஸ்கர் பெர்னாண்டசின் உடல் உடுப்பி, மங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் வைக்கப்பட்டு, அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அவரது உடலை பெங்களூருவுக்கு கொண்டு வந்தனர். இங்கு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை அவரது உடல் வைக்கப்பட்டது.
ராகுல்காந்தி அஞ்சலி
அங்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஓசூர் ரோட்டில் உள்ள செயிண்ட் பேட்ரிக் கிறிஸ்தவ ஆலயத்திற்கு ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல் எடுத்து வரப்பட்டு அங்கு வைக்கப்பட்டது.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உடல் அடக்கம்
அதன்பிறகு அங்கு கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்த மயானத்தில் ஆஸ்கர் பெர்னாண்டசின் உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக பெங்களூருவில் ரெஸ்ட்ஹவுஸ் ரோட்டில் உள்ள ஆஸ்கர் பெர்னான்டசின் வீட்டிற்கு நேரில் வந்த ராகுல் காந்தி, அங்கு அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story