தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை
மேலகிருஷ்ணன்புதூர் அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
மேலகிருஷ்ணன்புதூர் அருகே தாய் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பூட்டிய வீட்டுக்குள்...
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் லூர்து காலனியை சேர்ந்தவர் ராயப்பன். இவருடைய மகன் சுதர்சன் (வயது 31). மீனவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இவருடைய தாயார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். தாயின் மரணம் சுதர்சனை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக சுதர்சன், மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் வீடு பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவருடைய சகோதரி மேரி டயானா உறவினர்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
தூக்கில் பிணம்
அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சுதர்சன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுதர்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் இறந்த சோகத்தில் மீனவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story