ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் ஆய்வு: பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை-அலுவலர்களுக்கு, கலெக்டர் கார்மேகம் உத்தரவு
ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சேலம்:
ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கார்மேகம், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் பல்வேறு துறைகளின் கீழ் நடந்து வரும் வளர்ச்சிபணிகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி புத்திரகவுண்டன்பாளையத்தில் ரேஷன்கடையை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்தும், அப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா? என்றும், அதன் எண்ணிக்கை குறித்தும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நெல் கொள்முதல் நிலையம்
இதனை தொடர்ந்து தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, அங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் முறையாக தானிய சேமிப்பு கிடங்கில் பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும், அதன் தரம் குறித்தும் நேரில் பார்வையிட்டார்.
இதேபோல் தேவியாக்குறிச்சியில் உள்ள அரசு மறு வாழ்வு இல்லத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள 52 பேருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்தும், அவை தரமாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மனுக்கள் மீது நடவடிக்கை
தொடர்ந்து, ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்து, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவக்குமரன், தலைவாசல் தாசில்தார் சுமதி உள்பட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story