கூடுவாஞ்சேரி அருகே குடோனில் பதுக்கிய ரூ.28 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது - 7 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே குடோனில் பதுக்கிய ரூ.28 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது - 7 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2021 6:02 AM IST (Updated: 17 Sept 2021 6:02 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே குடோனில் பதுக்கிய ரூ.28 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூர் தங்கப்பாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெரிய அட்டைபெட்டியில் பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் போலீசார் பெருமட்டுநல்லூர் தங்கப்பாபுரம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 36), காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (34), பழனிவேல் (32), கணேசன் (37), விழுப்புரம் குமரவேல் (32), சென்னை அம்பத்தூர் அபேல்ராஜ் (40), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பெங்களூருவில் இருந்து மினி லாரி மூலம் புகையிலை பொருட்களை ஏற்றி வந்து மொத்தமாக வியாபாரம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து குடோனில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகளையும், அட்டை பெட்டிகளையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.7 லட்சத்து 16 ஆயிரத்து 610-ஐ போலீசார் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 3 ஆயிரத்து 970 என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறைவாகியுள்ள சிவகாசி பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 47), என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story