வாத்து வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி


வாத்து வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி
x
தினத்தந்தி 17 Sept 2021 6:08 AM IST (Updated: 17 Sept 2021 6:12 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் வாத்து வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ரங்கநாதர் வீதியில் வசித்து வருபவர் பழனி, வாத்து வியாபாரி. நேற்று முன்தினம் வெளியூர் சென்றுள்ளார். இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் பழனியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு பீரோ உள்ளிட்ட இடங்களில் நகைகள் உள்ளதா என்று தேடிப் பார்த்துள்ளனர். நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
பின்னர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் லோகேஷ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். அந்த வீட்டிலும் நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் வெறும் கையோடு சென்றுள்ளனர். 

இந்தநிலையில் வாத்து வியாபாரி பழனி நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோ மற்றும் பாதுகாப்பு பெட்டகங்களும் உடைந்து இருந்தது. 

ஏற்கனவே இவரது வீட்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றபோது நகைகளை உடன் எடுத்துச் சென்றதால் நகைகள் தப்பியதாக பழனி தெரிவித்தார். 
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திற்கு சென்று  வீட்டு உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

Next Story