கண்ணமங்கலம் அருகே போலீஸ் வேன் மோதி காரில் சென்ற கணவன், மனைவி பலி
கண்ணமங்கலம் அருகே போலீஸ் வேன், கார் மீது மோதியதில் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற கணவன்- மனைவி பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே போலீஸ் வேன், கார் மீது மோதியதில் பேரன் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற கணவன்- மனைவி பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
பிறந்தநாள் விழாவுக்கு சென்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). இவரது மனைவி சரஸ்வதி (53). இவர்களின் மகன் ராம்குமார் (28). குடியாத்தத்தில் உள்ள ராமச்சந்திரனின் மகள் சவீதா-கார்த்திகேயன் தம்பதியரின் மகன் பிரணவ் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் வாடகை காரில் குடியாத்தத்துக்கு சென்றனர்.
காரை செவ்வழகன் (27) என்பவர் ஓட்டிச்சென்றார். இதே நேரத்தில் வேலூரிலிருந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள் 8 பேர் வேனில் சென்றனர். போலீஸ்வேனை பெரியசாமி என்பவர் ஓட்டிச்சென்றார்.
கணவன்- மனைவி பலி
கண்ணமங்கலத்தை அடுத்த அழகுசேனை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே ரோட்டில் உள்ள பள்ளத்தில் வேன் இறங்காமல் இருக்க வேன் டிரைவர் வலதுபுறம் வேகமாக சென்றுள்ளார். அப்போது ராமச்சந்திரன் குடும்பத்தினர் சென்ற காரின் டிரைவர், வேன் மீது மோதாமல் இருக்க தனது காரை வலதுபுறம் திருப்பியுள்ளார். ஆனாலும் போலீஸ் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி, அருகே சாலையோரம் இருந்த விநாயகர் கோவில் அருகே இழுத்துச் சென்றது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
காரில் இருந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயத்துடன் காரில் சிக்கிக்கொண்ட ராமச்சந்திரன், ராம்குமார், டிரைவர் செவ்வழகன் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார்.
7 பேர் காயம்
போலீஸ் வேன் கவிழ்ந்த நிலையில் இருந்ததால், வேனில் சிக்கிக்கொண்டவர்களை அப்பகுதி மக்கள் ஏணி வைத்து பாதுகாப்புடன் மீட்டனர். இதில் போலீஸ் வேன் டிரைவர் பெரியசாமி, பாரதி (55), பாபு (30), சரவணன் (29), மோகன் (58), சுரேஷ் (33), ஆனந்தன் (27) ஆகிய 7 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சரஸ்வதி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தில் உள்ள சிறிய பாலத்தின் மீது பெரிய பள்ளம் இருந்து வருகிறது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்காததால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே விபத்துகளை தடுக்க போதிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story