கோம்பையில் சமுதாய கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்


கோம்பையில் சமுதாய கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Sep 2021 4:07 PM GMT (Updated: 17 Sep 2021 4:07 PM GMT)

கோம்பையில் சமுதாய கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.

உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கோம்பை, 11-வது வார்டு பகுதியில் ஒரு சமூகத்துக்கு சொந்தமான சமுதாயகூடம் உள்ளது. இந்த சமுதாயகூடம் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ளதாக வேல்முருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. 
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் ஆக்கிரமிப்பில் உள்ள சமுதாயகூடத்தை இடிக்க நடவடிக்கை எடுத்தார். இந்தநிலையில் சமுதாய கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன் மற்றும் கோம்பை போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதுவரையில் சமுதாயகூடத்தை இடிக்கும் நடவடிக்கையில் இறங்க கூடாது என்று அந்த சமூகத்தினர் வலியுறுத்தினார்கள். அப்போது இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story