திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்


திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2021 9:52 PM IST (Updated: 17 Sept 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே, பழைய கரூர் சாலையில் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ&மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி, இந்த கல்லூரியும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் கல்லூரிக்கு வந்த 200&க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவ&மாணவிகள் கூறுகையில், முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையுடன் தொழிற்கல்வி பயின்று வருகிறோம். இதற்கிடையே இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை அரசு சார்பில் கல்லூரிக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்கள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் எங்களது பெற்றோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், கல்லூரி நிர்வாகம் முழு கட்டணத்தை செலுத்த கூறுவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே இந்த விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.  
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story