அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல்
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலைப்பட்டியலை படிக்க அதிகாரிகள் காலதாமதம் செய்ததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருக்கோவிலூர்
4 ஆயிரம் மூட்டை தானியங்கள்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு நேற்று நெல், கம்பு, கேழ்வரகு, மணிலா உள்ளிட்ட சுமார் 4 ஆயிரம் மூட்டை தானியங்கள் வரத்து இருந்தது.
வழக்கம்போல் விற்பனை கூடத்துக்கு வந்த வியாபாரிகள் தானியங்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்தனர். பின்னர் விலைப்பட்டியலை விவசாயிகளிடத்தில் படிக்க வேண்டிய அதிகாரிகள் அதை படிக்காமல் காலதாமதம் செய்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருக்கோவிலூர்விழுப்புரம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு(பயிற்சி) நமச்சிவாயம், நெல் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், அரகண்டநல்லூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் புனித வள்ளி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர்.
பின்னர் உடனடி விற்பனைக்காக தானியங்களின் விலை பட்டியலை படிக்க ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளிடம் போலீசார் வலியுறுத்தினர். ஆனால் விலைப்பட்டியலை படிக்க தொடர்ந்து அதிகாரிகள் காலதாமதம் செய்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களிடம் போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் வாபஸ்
ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த விவசாயிகள் விற்பனை கூடத்துக்கு உடனடியாக கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும், தானியங்கள் திருடு போவதை தடுக்க வேண்டும், பழுதடைந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்ய வேண்டும், இரவு நேர பாதுகாவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தினர்.
இதை கேட்டறிந்த அதிகாரிகள் இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் விலைப்பட்டியலை படிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர். இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தால் திருக்கோவிலூர்-விழுப்புரம் மெயின் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story