திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை. கலெக்டர் தகவல்


திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை. கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Sept 2021 11:33 PM IST (Updated: 17 Sept 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கிரிவலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிவார்கள். 

இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. 

தடை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களில் மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. 

இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story