தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Sept 2021 11:39 PM IST (Updated: 17 Sept 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கழிவுநீர் ஓடை சுத்தமானது
வல்லன்குமாரன்விளை பகுதியில் பத்திரகாளி அம்மன்கோவில் ெதருவில் உள்ள கழிவுநீர் ஓடையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் அவதிப்படுவதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்தனர். சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர். 
கால்வாயை தூர்வார வேண்டும்
கொல்லங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட ததேயூபுரம் காலனியில் உள்ள ஏ.வி.எம். கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகள், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் கால்வாயை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
                                                              -சர்ஜின்ரா, ததேயூபுரம்.
கால அட்டவணை தேவை
குறும்பனை பஸ்நிலையத்தில் பஸ் வரும் நேரம் குறித்த கால அட்டவணை வைக்கப்படாமல் உள்ளது. இதனால், அங்கு வரும் பயணிகள் பலமணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கால அட்டவணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                -ஜெஸ்தமன், குறும்பனை.
மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?
தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் வளாகத்துக்குள் பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்களுக்காக ஓய்வறையும், கழிவறையும் 2012-13-ம் ஆண்டில்  கட்டப்பட்டது. ஆனால், அந்த கட்டிடங்கள் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், அந்த அறைகளின் முன் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி ஓய்வறையையும், கழிவறையையும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?. 
                                               -சோபு ஜெயச்சந்திரன், தக்கலை.
பாசன கால்வாய் சீரமைக்கப்படுமா?
தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீரகேரளப்பனேரி குளம் உள்ளது. இந்த குளத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஊரடி கால்வாய் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் விடப்படுகிறது. முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயில் செடி, கொடிகள் படர்ந்தும், சிலர் குப்பைகளை கொட்டுவதாலும் கடைமடை வரை தண்ணீர் சீராக செல்லாமல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் தூர்வாரி, சீரமைக்கப்படுமா?.
                                                                            -ஆதிக், தாழக்குடி. 
ரவுண்டானா தேவை
நாகர்கோவில், அஞ்சுகிராமம் சாலையில் வழுக்கம்பாறை சந்திப்பு உள்ளது. இங்கு நான்கு சாலைகளும் சந்திக்கும் பகுதியாகும். எனவே, இந்த சந்திப்பில் ரவுண்டானா அமைத்து, வழிகாட்டி பலகைகளும் வைத்தால் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                                            -அனந்த நாராயணன், மருங்கூர்.
சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் கோர்ட்டின் கிழக்கு பக்கம் உள்ள சுவர் இடிந்து கழிவு நீர் ஓடையில் விழுந்து உள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவர் மற்றும் கழிவுநீர் ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                            -அருண், டி.வி.டி.காலனி.


Next Story