வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுவனை நாய்கள் கடித்து குதறியது


வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுவனை நாய்கள் கடித்து குதறியது
x
தினத்தந்தி 18 Sept 2021 12:01 AM IST (Updated: 18 Sept 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுவனை 5 நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்
திருப்பூரில் வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுவனை 5 நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
சிறுவனை குடித்து குதறிய நாய்கள்
திருப்பூர் தாராபுரம் ரோடு தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் பிரகதீஸ்(வயது 6). பள்ளி மாணவன். நேற்றுமுன்தினம் மாலை பிரகதீஸ் தனது வீட்டுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தெருநாய்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளன. திடீரென 5 நாய்கள் ஓடி வந்து சிறுவன் பிரகதீசை சரமாரியாக கடித்து குதறியது. ஒரு கட்டத்தில் நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுவனை தரதரவென இழுத்துச்சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ராமசாமி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். 
அங்கு தனது மகனை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதை பார்த்த ராமசாமி, கையில் கம்பை எடுத்துக்கொண்டு நாய்களை துரத்தினார். அதன்பிறகே தெருநாய்கள் சிறுவனை விட்டு விட்டு சிதறி ஓடின. தலை, கை, கால் என உடலில் பல இடங்களில் காயமடைந்த சிறுவனை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
வீடியோ காட்சியால் பரபரப்பு
சிறுவனை தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறிய காட்சிகள், அங்குள்ள வீட்டு முன்பு பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சிறுவனை தெருநாய்கள் கடித்து குதறும் காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி வீதிகளில் இதுபோல் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பாண்டம்பாளையம் பகுதியில் 10&க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்தன. வாலிபாளையம் பகுதியிலும் தெருநாய்கள் பொதுமக்களை கடித்து வருகிறது. தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


Next Story