கெட்டுப்போன சிக்கன், பிரியாணி அழிப்பு
ராமநாதபுரம் உணவகங்களில் அதிரடி சோதனையில் கெட்டுப்போன சிக்கன், பிரியாணி அழிக்கப்பட்டன.
ராமநாதபுரம்,
ஆரணியில் உள்ள ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தயாரிக்கப்படும் அசைவ, சைவ உணவு வகைகளை சோதனை மேற்கொள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.இதன்படி, ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா வழிகாட்டுதல் படி, மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமநாதபுரம் தர்மர், ராமேசுவரம் லிங்கவேல், கீழக்கரை ஜெயராஜ், பரமக்குடி செந்தில் ராஜ்குமார், கமுதி முத்துசாமி, கடலாடி வீரமுத்து ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்த உணவு வகைகளை ஆய்வு செய்தனர்.இதில் நாள்பட்ட பொறித்த கோழி இறைச்சி 40 கிலோ, முந்தைய நாள் பிரியாணி 12 கிலோ ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர்.28 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர்.
இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் தொடர்ந்தால் உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தினார்.
---
Related Tags :
Next Story