ஆட்டோ டிரைவர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
தென்காசி அருகே கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த வக்கீல் சதீஷ்குமார் என்பவர் ராமகிருஷ்ணனை தாக்கி அதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.
அவரை செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமகிருஷ்ணனின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தில் திரண்டனர். அவர்கள் சதீஷ்குமாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யாத வரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று வலியுறுத்தினர். அதற்கு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.
இதன் பிறகு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ராமகிருஷ்ணனின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், போலீசார் கொடுத்த வாக்குறுதியை நம்பி உடலை பெற்றுக் கொண்டோம். காலை 11 மணிக்குள் குற்றவாளியை கைது செய்யாவிட்டால் எங்களது போராட்டம் மீண்டும் தொடரும் என்றனர்.
Related Tags :
Next Story