குருவிகுளம் அருகே விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவேங்கடம்:
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கூலி தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் முருகன் (வயது 38). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூரணி (33). இந்த தம்பதியின் மகன் சுஜன் ராஜ் (3).
இவர்களது குலதெய்வ கோவில், தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூர் அருகில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த வாரம் கொடை விழா நடந்தது. தொடர்ந்து 8-ம் நாள் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முருகன் தன்னுடைய தாயார் முத்துலட்சுமி (63), மகன் சுஜன்ராஜ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தடுப்பு சுவரில் மோதியது
பின்னர் மாலையில் கோவிலில் இருந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். குருவிகுளத்தை அடுத்த அவனிகோனேந்தல் அருகில் வந்தபோது, அங்குள்ள குளத்து கரையில் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
தாய்-மகன் சாவு
இதில் பலத்த காயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த முருகன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். குழந்தை சுஜன்ராஜ் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினான். அந்த வழியாக சென்றவர்கள், இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து குருவிகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சோகம்
இறந்த முத்துலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருவிகுளம் அருகே சாலையோர தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய்-மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story