புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகள்; 16 மாநிலங்களை சேர்ந்த பொறியாளர்கள் பார்வையிட்டனர்


புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகள்; 16 மாநிலங்களை சேர்ந்த பொறியாளர்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 18 Sept 2021 1:27 AM IST (Updated: 18 Sept 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை 16 மாநிலங்களை சேர்ந்த பொறியாளர்கள் பார்வையிட்டனர்.

கரூர்,
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை 16 மாநிலங்களை சேர்ந்த பொறியாளர்கள் பார்வையிட்டனர்.
புதிய தொழில்நுட்பம்
கரூர் மாவட்டம் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சி, ஜல்லிப்பட்டியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைமுறையில் இல்லாத புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலையினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பொறியாளர்கள் குறைந்த செலவில் தரமான சாலைகள் அமைப்பது தொடர்பான செயல்முறைகள் பற்றி பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை தலைமை பொறியாளர் குற்றாலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய ஊரக வளர்ச்சி முகமையும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி முகமையும் இணைந்து பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் பயன்படுத்தப்படும் நடைமுறையில் இல்லாத புதிய தொழில் நுட்பங்களை பிறமாநில பொறியாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
16 மாநிலங்களை சேர்ந்த பொறியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் டெல்லியை சேர்ந்த தேசிய ஊரக சாலை மேம்பாட்டு முகமை பொறியாளர்கள், தேசிய சாலை ஆராய்ச்சி நிறுவன பொறியாளர்கள், இந்திய தொழில்நுட்ப கழக பொறியாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களை சேர்ந்த செயற்பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், தமிழகத்தில் உள்ள 20 பிற மாவட்டங்களை சேர்ந்த ஊரக வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர்கள் என அனைவரும் இந்த புதிய நடைமுறையில் இல்லாத தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் வெள்ளியணை கிராமம், ஜல்லிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட இந்த சாலையை பொறியாளர்கள் ஆய்வு செய்து கொண்டு உள்ளார்கள். 
2 அடுக்கு சாலைகள்
5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையில் முதல் 500 மீட்டர் சாதாரண தொழில்நுட்பத்திலும் மீதம் உள்ள சாலைகள் தேசிய தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆலோசனையின் பேரில் சிமெண்டு கலவையுடன் 2 அடுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று (அதாவது நேற்று) அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சொக்கலாபுரம் முதல் பூஞ்சோலை சாலை வரை வேறு ஒரு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலையையும் பார்வையிட உள்ளார்கள். 
நாளை (இன்று) இதுதொடர்பான ஒரு கருத்துப்பட்டறையும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story