உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை


உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கு ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பெரம்பலூர்:

தற்செயல் தேர்தல்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு 28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் இறப்பு, ராஜினாமா போன்ற பல்வேறு காரணங்களினால் கடந்த ஜூன் மாதம் வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 9&ந் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவியும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளும் காலியாக உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளும், 13 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளும் காலியாக உள்ளன.
5 பேர் வேட்பு மனு தாக்கல்
தற்செயல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், 2-வது நாளில் செந்துறை ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர், சிறுகடம்பூர் ஊராட்சியில் 3&வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 3-வது நாளான நேற்று செந்துறை ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் அழகாபுரம் ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், இடையக்குறிச்சி ஊராட்சியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், தா.பழூர் ஒன்றியத்தில் அம்பாபூர் ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் அந்த பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரைக்கும் அரியலூர் மாவட்டத்தில் 13 வார்டு உறுப்பினர் பதவிகளில், 5 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனு தாக்கல் செய்யவில்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்செயல் தேர்தலுக்கு 2 நாட்களில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், 3-வது நாளான நேற்றும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும்.

Next Story