போராட்டத்தில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள்


போராட்டத்தில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள்
x
தினத்தந்தி 18 Sept 2021 2:38 AM IST (Updated: 18 Sept 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

27-ந் தேதி தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:
27-ந் தேதி தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
27-ந் தேதி போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வருகிற 27-ந் தேதி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடத்த அனைத்து ஐக்கிய விவசாய முன்னணி போராட்டக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளிடம் நேரடியாக ஆதரவு கேட்டுள்ளோம்.
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம். இடதுசாரிகள், மக்கள் நீதி மய்யம், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி ஆகியன 27-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்கள். அன்று பல ஆயிரக்கணக்கான இடங்களில் சாலை மறியல், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். 1 லட்சம் விவசாயிகள் இதில் கலந்துகொள்வார்கள்.
திரும்ப பெற வேண்டும்
தமிழக அரசு கோவில் நிலங்களை குத்தகைதாரர்களிடம் இருந்து மீட்பதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கோவில் நிலம் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் கைது நடவடிக்கை என்று கூறுவதால், சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 
கோவில் நிலங்களை வியாபார நோக்குடன் பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை என்பதில் மாற்றுகருத்து இல்லை. சாதாரண மக்களை இந்த சட்டம் பாதிக்கும். சாதாரண மக்களுக்கு எதிராக இதனை பயன்படுத்த மாட்டோம் என்பதை முதல்-அமைச்சர் உறுதியளிக்க வேண்டும். இந்த திருத்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். குடியிருப்போரை வாடகை கட்டவில்லை என்று அகற்ற ஏற்கனவே இந்த சட்டத்தில் சட்டப்பிரிவுகள் உள்ளன. எனவே இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் ரவி, நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story