9 மாத குழந்தையை கொன்று ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு
பெங்களூருவில் குடும்ப தகராறில் 9 மாத குழந்தையை கொன்றுவிட்டு ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 5 நாட்களுக்கு பின்பு 3 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பத்திரிகை ஆசிரியர்
பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா அருகே சேத்தன் சர்க்கிள் 5-வது கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவரது மனைவி பாரதி(வயது 50). இந்த தம்பதிக்கு சிஞ்சனா(34), சிந்துராணி(31) என்ற மகள்களும், மதுசாகர்(27) என்ற மகனும் இருந்தார்கள். இவர்களில் சிஞ்சனா, சிந்துராணிக்கு திருமணமாகி விட்டது. சிஞ்சனாவுக்கு 3 வயதில் பிரக்சா என்ற பெண் குழந்தையும், சிந்துராணிக்கு பிறந்து 9 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.
சங்கர் பத்திரிகை நடத்தி வருவதுடன், அதன் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். குடும்ப பிரச்சினையால் மகள், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கர் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்று விட்டார். இதனால் அவர் 5 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீடு பூட்டி கிடந்துள்ளது. இதன் காரணமாக சங்கர் திரும்பி சென்று விட்டதாக தெரிகிறது.
அழுகிய நிலையில் உடல்கள்
இந்த நிலையில், நேற்று மாலையில் சங்கரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவா¢கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார்கள். அப்போது பாரதி தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றார்கள்.
அப்போது பாரதி, அவரது மகள்கள் சிந்துராணி, சிஞ்சனா, மகன் மதுசாகர் ஆகிய 4 பேரும் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். வீட்டின் ஒரு அறையில் 9 மாத குழந்தை பிணமாக கிடந்தது. இதைப்பார்த்து போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் 3 வயது குழந்தை பிரக்சா இருப்பதை கண்டனர். உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
தகவல் அறிந்ததும் மேற்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது சங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதாவது சங்கரின் மகளான சிந்துராணிக்கு திருமணமான பின்பு, அவர் தனது கணவருடன் சேர்ந்து வாழாமல் வந்துவிட்டதாக தெரிகிறது. மகள், கணவருடன் சேர்ந்து வாழாமல் இருக்கும் விவகாரம் தொடர்பாக சங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் குடும்ப தகராறில் சங்கர் வீட்டை விட்டு வெளியே சென்ற அன்றைய தினமே பாரதி தனது மகள்கள் மற்றும் மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 5 நாட்களுக்கு முன்பாகவே தற்கொலை செய்திருப்பதால் 4 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு
அதே நேரத்தில் குடும்ப பிரச்சினை தவிர வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் வந்து விசாரித்து தகவல்களை பெற்று சென்றனர்.
இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் குழந்தையை கொன்று விட்டு 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
3 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
இச்சம்பவத்தில் சிஞ்சனாவின் 3 வயது பெண் குழந்தையான பிரக்சா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து இருந்தது. 5 நாட்களுக்கு முன்பாக சிஞ்சனா உள்பட 4 பேரும் தற்கொலை செய்திருந்தாலும், குழந்தை மட்டும் வீட்டிற்குள்ளேயே தண்ணீர், உணவு இல்லாமல் 5 நாட்களாக பரிதவித்துள்ளது. உணவு இல்லாததால் குழந்தையால் அழுவதற்கு கூட முடியாததால், அதன் சத்தம் எதுவும் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன் வீட்டுக்கதவு, ஜன்னல்களை அடைத்து வைத்திருந்ததாலும் குழந்தையால் வெளியே வர முடியாமல் போனதும் தெரியவந்துள்ளது. என்றாலும் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் 5 நாட்களுக்கு பிறகு 3 வயது குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்திருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
9 மாத குழந்தை பசியால் சாவு?
4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 9 மாத ஆண் குழந்தையும் இறந்திருந்தது. அந்த குழந்தை படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பிணமாக கிடந்துள்ளது. அந்த குழந்தையை கொன்றுவிட்டு, பாரதி, சிந்துராணி உள்ளிட்டோர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதே நேரத்தில் 3 வயது குழந்தையை போல, 9 மாத குழந்தையையும் விட்டு இருக்கலாம் என்றும், ஆனால் அந்த குழந்தை பசியால் உயிர் இழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story