கூட்டு பலாத்காரம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் - சட்டசபையில் சித்தராமையா கோரிக்கை
கர்நாடகத்தில் நடைபெற்ற பாலியல் கூட்டு பலாத்கார சம்பவங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று சட்டசபையில் சித்தராமையா கோரினார்.
பெங்களூரு:
கூட்டு பாலியல் பலாத்காரம்
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில், முன்னாள், இந்நாள் உறுப்பினர்களின் மறைவு மற்றும் முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.
அதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மைசூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்கார விவகாரம் குறித்து விதி எண் 60-ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்கமாறு கோரினார். அதற்கு சபாநாயகர் காகேரி, விதி எண் 60-க்கு பதிலாக 69-ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குவதாக கூறினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மனநிலை நீங்க வேண்டும்
அவர் பேசுகையில், "சபை விதி எண் 60-ஐ கொண்டு வந்ததே பொது பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தான். அவ்வாறு இருக்கும்போது, இந்த விவகாரத்தை 69-வது விதியின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குவது கூறுவது சரியல்ல. அவ்வாறு செய்தால், 60-வது விதியின் முக்கியத்துவமே போய்விடும்" என்றார்.
அப்போது சபாநாயகர் காகேரி பேசும்போது, "அதற்காக எல்லா பிரச்சினைகளையும் 60-வது விதியின் கீழ் விவாதிக்க அனுமதி கேட்டால், அதன் புனிதத்தன்மை நீடிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. காங்கிரசாரும் அதே விதியின் கீழ் அனுமதி கேட்கிறார்கள், ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும் அதே விதியின் கீழ் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். எல்லா பிரச்சினைகள் குறித்து அதே விதியின் கீழ் விவாதிப்பது என்பது சாத்தியமா?. தற்போது உள்ள ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது அதே கோரிக்கையை தான் முன் வைக்கிறார்கள். அதனால் மொத்தத்தில் இந்த மனநிலை நீங்க வேண்டும்" என்றார்.
ஆலோசித்து முடிவு
அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி குறுக்கிட்டு பேசுகையில், "எல்லா பிரச்சினைகளையும் 60-வது விதியின் கீழ் விவாதிக்க முடியாது. பிரச்சினையின் தீவிரம், முக்கியத்துவம் மற்றும் அவசர நிலை போன்ற நேரங்களில் மட்டுமே 60-வது விதியை பயன்படுத்தி விவாத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்கும்போது சிறிது பேசி விடுகிறார்கள். பிறகு விவாதத்தை அனுமதிக்கும்போது விவரமாக பேசுகிறார்கள். இவ்வாறு செய்தார் எப்படி?" என்றார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ்குமார், "சபையின் 60-வது விதியை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். எதிர்க்கட்சிகள் முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விரும்புபோது தான் அந்த விதியின் கீழ் அனுமதி வழங்குமாறு கோருகிறார்கள். அதனால் சித்தராமையா முன்வைத்துள்ள பிரச்சினைக்கு 60-வது விதியின் கீழ் அனுமதி வழங்க வேண்டும்" என்றார். அதற்கு சபாநாயகர், இதுகுறித்து ஆலோசித்து உரிய அனுமதி வழங்குமாறு அறிவித்தார். அத்துடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story