புழல் சிறை அதிகாரி என்று கூறி பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது


புழல் சிறை அதிகாரி என்று கூறி பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2021 5:24 AM IST (Updated: 18 Sept 2021 5:24 AM IST)
t-max-icont-min-icon

புழல் சிறை அதிகாரி என்று கூறி பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர் சூரபட்டு சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா (வயது 32). இவர், பெருங்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனது 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் புழல் பகுதியை சேர்ந்த மதன்குமார் (32) என்பவர் லட்சுமி பிரியாவுக்கு அறிமுகமானார். அப்போது மதன்குமார், தான் புழல் சிறையில் அதிகாரியாக வேலை செய்து வருவதாக கூறினார்.

இதனை நம்பிய லட்சுமிபிரியா, தனது கணவர் திவாகரை விவாகரத்து செய்ய உதவுமாறு மதன்குமாரிடம் கேட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த மதன்குமார், வழக்கு செலவுக்காக என்று கூறி பல கட்டங்களாக ரூ.13 லட்சம் வரை லட்சுமி பிரியாவிடம் வாங்கினார்.

ஆனால் சொன்னபடி மதன்குமார் வேலையை முடிக்காமல் இழுத்தடித்ததால் லட்சுமிபிரியா, தன்னிடம் வாங்கி ரூ.13 லட்சத்தை திருப்பி தரும்படி நேரடியாக சென்று கேட்டார். அப்போது மதன் குமார் லட்சுமி பிரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் லட்சுமி பிரியா இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரிடம் விசாரணை செய்தனர்.

அதில் அவர், லட்சுமி பிரியாவிடம் ரூ.13 லட்சம் வாங்கி மோசடி செய்ததும், இதற்காக புழல் சிறையில் நேர்முக உதவியாளராக வேலை செய்வதாக கூறி போலி அடையாள அட்டை தயாரித்ததும் உறுதியானது. மதன் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story