எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 27 வீரர்கள் சத்தியபிரமாணம்


எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 27 வீரர்கள் சத்தியபிரமாணம்
x
தினத்தந்தி 18 Sept 2021 8:38 PM IST (Updated: 18 Sept 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 27 வீரர்கள் சத்தியபிரமாணம்

குன்னூர்

குன்னூர் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 27 இளம் வீரர்கள் சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

எம்.ஆர்.சி. ராணுவ பயிற்சி முகாம்

இந்திய ராணுவத்தில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் என்ற பழமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் அமைந்துள்ளது.

 இங்கு தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இதில் இந்தி மொழி பயிற்சி, உடற்பயிற்சி, போர் ஆயுத பயிற்சி போன்றவை இளம் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகின்றன. தொடர்ந்து 9 வார பயிற்சிக்கு பின்னர் அவர்களுக்கு சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சத்தியபிரமாணம்

இதன்படி குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 27 இளம் ராணுவ வீரர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி சமூக இடைவெளியை பின்பற்றி நேற்று நடைபெற்றது. 

இதற்கு எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் தலைமை தாங்கி, இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்தார். ராணுவ வீரர்கள் உப்பு, பகவத் கீதை, பைபிள், குரான் ஆகியவற்றின் மீது கை வைத்து சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து, எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் பேசும்போது, கடினமான பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்கள் நம் தாய் நாட்டிற்காக பணியாற்ற உள்ளனர். 

அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். கொரோனா தொற்று காலத்திலும் இளம் ராணுவ வீரர்களுக்கு சீரிய முறையில் பயிற்சி அளித்த அனைவரையும் பாராட்டுகிறேன் என்று கூறினார்.

பெற்றோர்களுக்கு அனுமதியில்லை

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளம் வீரர்களின் பெற்றோர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

 சத்திய பிரமாணம் எடுத்த வீரர்கள் பணிக்காக நாட்டின் எல்லை பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றனர்.

Next Story