ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது


ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது
x
தினத்தந்தி 18 Sept 2021 8:38 PM IST (Updated: 18 Sept 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது

ஊட்டி

முழு ஊரடங்குக்கு பின்னர் ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்புக்கு அனுமதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது. 

தொற்று பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு தளர்வை தொடர்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

இதையடுத்து முழு ஊரடங்குக்கு பின்னர் மலைகளின் அரசியான ஊட்டியில் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்தநிலையில் நேற்று நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரிக்ஸ் பள்ளியில் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர், நடிகை, இயக்குனர், பணியாளர்கள் உள்பட 90 பேர் ஹைதராபாத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை காண்பித்து படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றனர். 

அன்னி மஞ்சி சாகானமுனே என்று பெயரிடப்பட்ட திரைப்படம் குடும்ப மற்றும் நண்பர்கள் கதையை கருவாகக் கொண்டது. இந்த படத்தில் புதுமுக நடிகர் சந்தோஷ் சோபன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தமிழில் குக்கூ திரைபடத்தில் நடித்த நடிகை மாளவிகா நாயர் நடிக்கின்றார்.

தெலுங்கு சினிமா

பள்ளியில் குழந்தைகளுடன் நடிப்பது, சைக்கிளில் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதுகுறித்து திரைப்பட இயக்குனர் நந்தினி கூறும்போது, தெலுங்கு சினிமா திரைப்படம் நீலகிரி மாவட்டத்தில் 35 நாட்கள் படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 படத்தின் காட்சிகள் 85 சதவீதம் மலைப்பிரதேசமான ஊட்டியில் எடுக்கப்படுகிறது. பசுமையான தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், மலை முகடுகள் போன்ற காட்சிகள் இடம் பெறுகிறது. 

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார். இந்த படப்பிடிப்பு ஊட்டி மட்டுமில்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Next Story