நீலகிரியில் மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு


நீலகிரியில் மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2021 8:38 PM IST (Updated: 18 Sept 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

ஊட்டி

நீலகிரியில் மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 மாணவிகளுக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

தொடர்ந்து அவர் மஞ்சூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனே மாணவி சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா பாதித்த மாணவி பள்ளிக்கு வந்து சென்றதால், பிற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கடந்த 16-ந் 9, 10-ம் வகுப்பு மாணவிகள், ஆசிரியர்கள் என 90 பேரிடம் இருந்து சுகாதார குழுவினர் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். 

நேற்று முடிவு வெளியானது. இதில் மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மேலும் 2 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தொடர்ந்து 2 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களது பெற்றோர்களிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

ஒரே பள்ளியில் 3 மாணவிகளுக்கு தொற்று பாதித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கின்றனர். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, குன்னூர், உப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகள், எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இதுவரை மாணவ-மாணவிகள் 7 பேருக்கு தொற்று உறுதியானது.

தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகளில் யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.

Next Story