கொடைக்கானல் பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா


கொடைக்கானல் பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Sept 2021 9:44 PM IST (Updated: 18 Sept 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பள்ளியில் வெளிநாட்டு மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், கொடைக்கானல் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த மாணவ&மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக இந்த பள்ளியானது மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து இந்த பள்ளியில் நாளை (திங்கட்கிழமை) முதல் மாணவ&மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அப்பள்ளியில் படிக்கும் உள்ளூர், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவ&மாணவிகள் கடந்த வாரம் வரவழைக்கப்பட்டு, ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டனர். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவ&மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வடகொரியாவை சேர்ந்த ஒரு மாணவர், ஜப்பானை சேர்ந்த ஒரு மாணவர், கொடைக்கானலை சேர்ந்த 2 மாணவர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த 4 மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதர மாணவ&மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 200&க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்திலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  
இதுகுறித்து கொடைக்கானல் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் கிருஷ்ணன் கூறுகையில், கொடைக்கானலில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்போது தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தபிறகே, பள்ளிக்கூடத்தை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். 

Next Story