மொபட் ஓட்டிய மாணவி மினிலாரி மோதி பலி உடன் சென்ற சிறுமி படுகாயம்


மொபட் ஓட்டிய மாணவி மினிலாரி மோதி பலி உடன் சென்ற சிறுமி படுகாயம்
x
தினத்தந்தி 18 Sept 2021 10:16 PM IST (Updated: 18 Sept 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே விளையாட்டுத்தனமாக தந்தையின் மொபட்டை ஓட்டி சென்ற மாணவி மினிலாரி மோதி பலியானார். உடன் சென்ற சிறுமி படுகாயம் அடைந்தார்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (வயது 15) ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10&ம் வகுப்பு படித்து வந்தாள். இவரது உறவினர் மணிகண்டனின் மகள் ராகவி(12) அதே பள்ளியில் 7&ம் வகுப்பு படித்தாள். பாண்டிசெல்வி நேற்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த தந்தையின் மொபட்டை விளையாட்டுத்தனமாக எடுத்து ஓட்டி கொண்டிருந்தார். பின்னர் அவர் மொபட்டின் பின்னால் ராகவியை உட்கார வைத்துக் கொண்டு, கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் முன்னால் சென்ற ஆட்டோவை முந்த முயன்றார். இந்த சமயத்தில் எதிரே வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. 
சாவு
இந்த விபத்தில் பாண்டிசெல்வியும், ராகவியும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாண்டிசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார். ராகவி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டுத்தனமாக மொபட் ஓட்டி விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் கொண்டமநாயக்கன்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story