தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Sept 2021 10:35 PM IST (Updated: 18 Sept 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தேனி, திண்டுக்கல்:
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயன்பாடின்றி கிடக்கும் பூங்கா
தேனி புது பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா பயன்பாடின்றி கிடக்கிறது. அங்கு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடிவதில்லை. எனவே பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தகுமார், தேனி.
செயல்படாத போக்குவரத்து சிக்னல்
நிலக்கோட்டை நால் ரோட்டில் உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் முறையின்றி சாலையை கடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைக்க வேண்டும்.
-அமீர் இப்ராகிம், நிலக்கோட்டை.
குண்டும், குழியுமான சாலை
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பிரவான்பட்டியில் உள்ள சாலை முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.
முழுநேர ரேஷன் கடை வேண்டும்
அய்யலூர் அருகே கருவார்பட்டியில் பகுதிநேர ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மாதம் ஒருமுறை மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த கடையில் தான் கருவார்பட்டி, சீரங்க கவுண்டனூர், கந்தமநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர். மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே ரேஷன் கடை செயல்படுவதால் அனைத்து தரப்பினருக்கும் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே இந்த கடையை முழுநேர ரேஷன் கடையாக மாற்றி அனைவருக்கும் பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கராஜ், சீரங்க கவுண்டனூர்.
ஆபத்தான மின்கம்பம்
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சி மைக்கேல்பட்டியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து அதன் உறுதி தன்மையை இழந்து வருகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் சீரமைப்பார்களா?
-ஆறுமுகம், மைக்கேல்பட்டி.
காட்சிப்பொருளான கழிப்பறை
உத்தமபாளையம் தாலுகா கோம்பை பேரூராட்சி 8&வது வார்டில் பெண்களுக்காக புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள கழிப்பறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபினேஷ்வரன், கோம்பை.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பழனி எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே 4 ரோடு சந்திப்பு சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீதர், பழனி.
பயணிகளின் தாகம் தீர்க்கப்படுமா?
பழனி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த எந்திரம் பழுதடைந்துவிட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே குடிநீர் வழங்கும் எந்திரத்தை சீரமைத்து பயணிகள் தாகம் தீர்க்கப்படுமா?
-ரூபன், பழனி.

Next Story