வேனில் கட்டி இருந்த இரும்புக் கம்பிகள் காருக்குள் புகுந்தன


வேனில் கட்டி இருந்த இரும்புக் கம்பிகள் காருக்குள் புகுந்தன
x
தினத்தந்தி 18 Sept 2021 10:50 PM IST (Updated: 18 Sept 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

வேனில் கட்டி இருந்த இரும்புக் கம்பிகள் காருக்குள் புகுந்தன

கோவை

டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால் வேனில் கட்டி இருந்த இரும்புக் கம்பிகள் காருக்குள் புகுந்தன. இதில் குழந்தைகள் உள்பட 4 பேர் உயிர் தப்பினர்.

காருக்குள் புகுந்த இரும்பு கம்பிகள்

கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வழியாக சுந்தராபுரத்தை நோக்கி பாட்டு ஆசிரியர் வினோத்ராஜ் (வயது 45) என்பவர் தனது காரில் சென்றுகொண்டு இருந்தார். 

அந்த காரில் அவருடைய மனைவி லீமா (39), மகன் பெனடிக் பிராயன் (10), மகள் ஆனா ரெக்சின் (8) ஆகியோர் இருந்தனர். அந்த கார் கரும்புக்கடை அருகே சென்று கொண்டு இருந்தது.

அப்போது பின்னால் இரும்புக்கம்பிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேன் டிரைவர் திடீரென்று வேகமாக பிரேக் போட்டார். இதனால் அந்த வேனில் கட்டப்பட்டு இருந்த 10&க்கும் மேற்பட்ட இரும்புக்கம்பிகள் முன்னோக்கி பாய்ந்தன. 

இதனால் அந்த இரும்புக்கம்பிகள் நேராக முன்னால் சென்ற காரின் பின்பகுதி கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.

4 பேர் உயிர் தப்பினர்

இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். இரும்புக்கம்பி காருக்குள் புகுந்ததில் வினோத் ராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் காருக்குள் இருந்த லீமா மற்றும் 2 குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

வேனில் இருந்த கம்பிகள் காருக்குள் பாய்ந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களின் வாகனங்களை உடனடியாக நிறுத்தி விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அவர்கள் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான சிங்காநல்லூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story