செஞ்சி அருகே பரபரப்பு பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் கலெக்டர் மோகன் நேரில் விசாரணை


செஞ்சி அருகே பரபரப்பு பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் கலெக்டர் மோகன் நேரில் விசாரணை
x
தினத்தந்தி 18 Sept 2021 11:01 PM IST (Updated: 18 Sept 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி, 

ரூ.13 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படியும், நேர்மையாகவும் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் ஊராட்சியில் துத்திப்பட்டு மற்றும் பொண்ணங்குப்பம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இதில் துத்திப்பட்டில் 3,800 வாக்காளர்களும், பொண்ணங்குப்பத்தில் 1,472 வாக்காளர்களும் உள்ளனர். தற்போது இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதில் துத்திப்பட்டை சேர்ந்த ஒரு பெண் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

தேர்தல் புறக்கணிப்பு

இந்த நிலையில் பொண்ணங்குப்பம் கிராம மக்கள் நேற்று காலை ஒன்று திரண்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். இதை அறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் துத்திப்பட்டு, பொண்ணங்குப்பம் கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதாக அந்த கிராம மக்கள் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், பொண்ணங்குப்பத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின்போதும் பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது என கிராம மக்கள் கலெக்டரிடம் கூறியதோடு, இனிவரும் காலங்களில் பொண்ணங்குப்பத்தை தனி ஊராட்சியாக மாற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு கலெக்டர் மோகன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதையடுத்து கலெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது சம்பந்தமாக பொண்ணங்குப்பம் கிராம மக்கள் கொடுத்துள்ள புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நியாயமான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் போன்றவற்றை அளித்து வாக்குகளை பெற முயலும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வேட்பாளர்கள் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்

இதேபோல் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் அக்கிராமத்தில் நடைபெற்றது. 
இதில் ரூ.1 லட்சத்தில் இருந்து ஏலம் தொடங்கியது. பின்னர் போட்டி போட்டு ஏலம் தொகை அதிகமாகிக்கொண்டே இருந்த நிலையில் வெள்ளேரிப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.14 லட்சத்திற்கு ஏலம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது.
மேலும் அக்கிராம இளைஞர்கள் சிலர், முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விட்டு முடிவு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏலம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட விவகாரம் தொடர்பாக துத்திப்பட்டு, பொண்ணங்குப்பம் கிராமங்களை சேர்ந்த 30 பேர் மீது அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஒன்றிய கவுன்சிலர் பதவி ரூ.20 லட்சத்துக்கு ஏலம்
செஞ்சி ஊராட்சி ஒன்றியம் பொண்ணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மோகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஊராட்சிக்குட்பட்ட பொண்ணங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய கிராமங்களில் விசாரணை நடத்தினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் துத்திப்பட்டு கிராமத்தில் நேற்று இரவு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஏலமும் நடந்ததாக தகவல் வெளியானது.
மேலும், இதில் துத்திப்பட்டை சேர்ந்த ஒருவர் ரூ.20 லட்சத்து 8 ஆயிரத்துக்கு ஒன்றிய கவுன்சிலர் பதவியை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. துத்திப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான ஏலம் அடுத்தடுத்து நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 





Next Story