293 முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்- கலெக்டர் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெறும் 293 முகாம்களில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று நடைபெறும் 293 முகாம்களில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 293 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்னேற்பாடு பணிகள் குறித்தும், எதிர்வரும் வட கிழக்கு பருவமழை பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணையின்படி, தமிழகம் முழுவதும் 2-வது முறையாக கொரோனா தடுப்பூசிமுகாம் நடத்தி அதிகப்படியான பொதுமக்களுக்கு தடுப்பூசியினை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அனைத்து ஊரக பகுதிகளிலும் நடைபெறுகிறது. அனைத்து கிராம பகுதியிலும் 18 வயதிற்கு மேற்பட்ட அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
25 ஆயிரம் பேருக்கு
மாவட்டத்தில் சுமார் 66 ஆயிரம் நபர்களுக்கு மேல் 2&ம் கட்ட தடுப்பூசி செலுத்த 84 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இவர்களும் முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ள அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகாம் பணியில் 2350 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர்.
ஆகவே அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழு பெண்கள் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். முகாமினை தாசில்தார்கள் கண்காணிக்க வேண்டும்.
வட்டார மருத்துவ அலுவலர்கள் தடுப்பூசி பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் இதர பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இன்று நடைபெறும் முகாமில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
தூர்வார வேண்டும்
எதிர்வரும் வடகிழக்கு பருவ மழை நாட்களில் தொடர் மழையால் மழை நீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வார வேண்டும்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைப்புகளை அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகளுக்கு தேவையான எந்திரங்களை பயன்படுத்தி முறையாக தூர்வாரி முடிக்க வேண்டும். இதன் அறிக்கையினை நாள்தோறும் சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர், நேர்முக உதவியாளர், தாசில்தார்கள் இதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நேர்முக உதவியாளர் சுரேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story