கண்மாய் வறண்டதால் தரிசாகும் விவசாய நிலங்கள்


கண்மாய் வறண்டதால் தரிசாகும் விவசாய நிலங்கள்
x
தினத்தந்தி 18 Sept 2021 11:33 PM IST (Updated: 18 Sept 2021 11:33 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் கண்மாய் வறண்டதால் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவருகின்றன.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டி ஊராட்சியில் இலந்தைக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மிகவும் பழமையானதாகும். இந்த கண்மாய் 150 ஏக்கர் பாசன பரப்பு கொண்டதாகும். இந்த கண்மாய் நீரை நம்பி செவல்பட்டி, அம்மையார்பட்டி, அன்னபூரணியாபுரம், அலமேலுமங்காபுரம், மூர்த்திநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
வறண்ட கண்மாய் 
தென்காசி மாவட்டம் கழுகுமலை பகுதியில் மழை பெய்யும் சமயங்களில் தண்ணீர் கண்மாய்க்கு வந்தடைகிறது. இந்த பகுதியில் 2 போகம் விவசாயம் நடைபெற்ற பகுதியாகும். நெல் அறுவடை முடிந்த பின்பு எள், உளுந்து, கம்பு, பாசிப்பயறு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். 
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்ததால் பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகி வருகின்றன. கண்மாயை தூர் வாரவும், வரத்து கால்வாயை சீரமைக்கவும், உடைந்த மடையை சரி செய்யவும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நிறைவேறாததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான விளைச்சல் நிலங்கள் அனைத்தும் தரிசாகி வருகின்றன. 
குடிநீர் ஆதாரம் 
கண்மாய் கரை முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் கரை வலுவிழந்து கொண்டிருக்கிறது. இந்த கண்மாய் செவல்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏனெனில் செவல்பட்டி ஊராட்சிக்கு தேவையான குடிநீரை பெற கண்மாய்க்குள் 10 போர்வெல் போடப்பட்டுள்ளது. கண்மாய் வறண்டு உள்ளதால் போர்வெல்லில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கண்மாயை தூர்வாரவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்தவும், உடைந்த மடையை சரி செய்யவும், வரத்து கால்வாயை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Next Story