கரூரில் 624 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


கரூரில் 624 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 Sept 2021 12:52 AM IST (Updated: 19 Sept 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 624 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரூர்,
கரூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 624 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தவறாமல் செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 12-ந் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் முதற்கட்டமாக நடத்தப்பட்டது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அறிவித்த இலக்கை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் 61 ஆயிரத்து 724 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 9 லட்சத்து 3 ஆயிரத்து 245 பேர் உள்ளனர். இதில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டோர் 4 லட்சத்து 90 ஆயிரத்து 693 பேர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் 1 லட்சத்து 6 ஆயிரத்து 543 பேர். முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 4 லட்சத்து 12 ஆயிரத்து 552 பேர். எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பாக, 2-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.
624 இடங்கள்
இம்முகாமின் மூலம் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 624 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் 3 ஆயிரத்து 744 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 96 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 196 இடங்களிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என 624 முகாம்களில் 2-வது முறையாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு செவிலியர், 2 குழந்தைகள் நல மைய பணியாளர்கள், ஒரு சுயஉதவிக்குழு உறுப்பினர், 2 ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர் பணியாற்ற உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story