திருச்சியில் ஒரே நாளில் 25 ரவுடிகள் அதிரடி கைது


திருச்சியில் ஒரே நாளில் 25 ரவுடிகள் அதிரடி கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 12:55 AM IST (Updated: 19 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஒரே நாளில் 25 ரவுடிகள் அதிரடி கைது

திருச்சி, செப்.19&
திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் 25 ரவுடிகள்  அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கொடூர கொலைகள்
அமைதி பூங்காவாக திகழ்ந்து வந்த திருச்சி மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக கொடூர கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அவற்றில் பழிக்குப்பழியாக நடந்த கொலைகள் சற்று அதிகம் இருந்தன. அந்த கொலைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் ரவுடிகள் பட்டியலில் இருந்தவர்கள். போலீசார் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், கொலையானவர்களின் உறவினர்கள் வன்மம் வைத்து கொலையாளிகள் ஜாமீனில் வெளிவரும் போது அவர்களை பழி தீர்த்துக்கொள்கிறார்கள்.
ரவுடிகளின் கூடாரமா?
அத்துடன் இந்த சம்பவம் முடியாமல் தொடர்கதைபோல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் Õதிடீர், திடீரென அரங்கேறும் கொடூரகொலைகளால் ரவுடிகளின் கூடாரமாக மாறுகிறதா திருச்சி?Ô என்ற தலைப்பில் மாநகரில் ரவுடியிசத்தை தலைதூக்க விடாமல் முற்றிலும் ஒடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று Ôதினத்தந்திÕயில் நேற்று வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த செய்தி எதிரொலியாக ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய மாநகர போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதற்காக திருச்சி தில்லைநகர், காந்திமார்க்கெட், ஸ்ரீரங்கம், கே.கே.நகர், கண்டோன்மெண்ட், பொன்மலை ஆகிய போலீஸ் சரகங்களில் தலா 3 தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
25 ரவுடிகள் ஒரே நாளில் கைது
அப்போது, சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்று, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த ரவுடிகளையும் தேடினார்கள். திருச்சி மாநகரில் நேற்று காலை முதல் 50&க்கும் மேற்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதற்கு பலனாக நேற்று ஒரே நாளில் 25 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும் சரித்திர பட்டியலில் ஈடுபட்ட பிற குற்றவாளிகள் 25 பேரும் சிக்கினர். அத்துடன் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் திருச்சி மாநகர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணிடம் கேட்டபோது கூறியதாவது:&
குண்டர் சட்டத்தில் 35 பேர் கைது
திருச்சி மாநகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று 40 பேர் கடந்த 2019&ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 2020&ம் ஆண்டு 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் சுமார் 35 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள் மட்டும் 20 பேர், போதை பொருள் விற்பனை செய்தவர்கள் 9 பேர், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் ஒருவர், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 5 பேர் ஆவார்கள்.
ஒரேநாளில் 50 பேர் கைது
அத்துடன் மாநகரில் ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் உள்ளிட்ட குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் மாநகரில் சட்டம்&ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அடிக்கடி தகராறு நடக்கும் பகுதிகள் என்று சுமார் 50 இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. அங்கு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட சரித்திர பட்டியலில் இடம் பெற்றுள்ள 25 ரவுடிகள் உள்பட 50 பேர் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழிக்கு பழியாக நடந்தது அல்ல
பொன்மலைபட்டியில் நடந்த கொலை சம்பவம், பழிக்குப்பழியாக நடந்தது அல்ல. பணம் கொடுக்கல்&வாங்கல் தகராறில் நடந்துள்ளது. இந்த வழக்கில் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சந்தேகப்படும்படியாக நபர்கள் நடமாட்டம் இருந்தாலோ அல்லது சமூக விரோத செயல்கள் நடந்தாலோ போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கோ பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.

Next Story