நில புரோக்கர் கொலையில் வாலிபர் கைது


நில புரோக்கர் கொலையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 12:56 AM IST (Updated: 19 Sept 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் நிலபுரோக்கர் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்

சிங்கம்புணரி, செப்
சிங்கம்புணரியில் நிலபுரோக்கர் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொலை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பொது மயானத்தில் நேற்று முன்தினம் தலை சிதைக்கப்பட்டு பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைபார்த்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் மதுரை அவனியாபுரத்தில் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 62) என்பதும், நில புரோக்கர் என்பதும் தெரியவந்தது. 
இதனைத்தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் சீராளன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். அப்போது சிங்கம்புணரி உப்புசெட்டியார் தெருவை சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தி(27) இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவனை கைது செய்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்தில் நிலபுரோக்கரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, கடந்த 16&ந் தேதி பொது மயானத்தில் ராமச்சந்திரன் மது போதையில் படுத்து கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த சத்தியமூர்த்தி, மதுபானத்தை ஒரு கப்பில் ஊற்றி தண்ணீர் கலந்து வைத்து விட்டு அமர்ந்துள்ளார். அப்போது அருகில் படுத்து இருந்த ராமச்சந்திரன் மதுவை எடுத்து குடித்து விட்டார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 
இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராமச்சந்திரனை தாக்கி உள்ளார். இதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் ராமச்சந்திரன் உடலை எரிக்க முயற்சித்துள்ளார். அப்பகுதியில் இருந்த இலை சருகுகளை போட்டு தீப்பற்ற வைத்துவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. கொலை நடந்த 24 மணி நேரத்தில் அதில் தொடர்புடைய வாலிபரை கைது செய்த சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் மற்றும் போலீசார் அனைவரையும் சிங்கம்புணரி பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story