ஆட்டோ டிரைவர் கொலையில் வக்கீல் கைது


ஆட்டோ டிரைவர் கொலையில் வக்கீல் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 1:41 AM IST (Updated: 19 Sept 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

தென்காசி:
தென்காசி அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் வக்கீல் கைது செய்யப்பட்டார். 

ஆட்டோ டிரைவர் கொலை

தென்காசி அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 16&ந்தேதி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் மகன் வக்கீல் சதீஷ்குமார் (34) திடீரென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்து, அவரை தாக்கி தள்ளி விட்டு காலால் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தென்காசி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொலையாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தி, தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ராமகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அழகப்பபுரத்திலும் கிராம மக்கள் சாலையில் திரண்டு மறியலுக்கு முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து ராமகிருஷ்ணனின் உடலை உறவினர்கள் பெற்று சென்று இறுதிச்சடங்கு நடத்தி தகனம் செய்தனர்.

வக்கீல் கைது

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் கொலை தொடர்பாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய அண்ணியிடம் ராமகிருஷ்ணன் அடிக்கடி பேசி வந்தார். இதனை நான் கண்டித்தேன். சம்பவத்தன்று என்னுடைய அண்ணியிடம் பேசக் கூடாது என்று ராமகிருஷ்ணனை மீண்டும் கண்டித்தேன். அப்போது அவர் என்னை அவதூறாக பேசியதால், எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அவரை தரையில் தள்ளி விட்டேன். இந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு வாக்குமூலத்தில் சதீஷ்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை போலீசார் ஆலங்குளம் மாஜிஸ்திரேட்டு அன்புதாசன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, தென்காசி கிளை சிறையில் அடைத்தனர். சதீஷ்குமாரின் அண்ணன் சுரேஷ்குமார் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய தந்தை பாண்டியராஜன் ஓய்வுபெற்ற போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ஆவார்.

Next Story