என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் - ரூ.2 லட்சம் கொள்ளை


என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் - ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 18 Sep 2021 8:15 PM GMT (Updated: 18 Sep 2021 8:15 PM GMT)

நன்னிலம் அருகே என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நன்னிலம்:
நன்னிலம் அருகே என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
என்ஜினீயர் 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள விசலூரில் திருவாரூர்&மயிலாடுதுறை மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 32). என்ஜினீயரான இவர், சென்னையில் ஐ.டி.கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். பாலமுருகனின் மனைவி கீர்த்திகா மற்றும் அவரது குழந்தை ஹர்ஷிதா ஆகியோர் மட்டும் விசலூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். 
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பாலமுருகன் சொந்த ஊரில் உள்ள வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பாலமுருகன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி கீர்த்திகா, குழந்தை மற்றும் உறவினர்களுடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.
வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பாலமுருகன் வீட்டு வழியாக சென்றபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்தார். இதனையடுத்து அவர் பாலமுருகனுக்கு போன் செய்து கேட்டபோது, அவர் தான் ஊட்டிக்கு சென்று உள்ளதாக கூறினார். 
அதைக்கேட்ட அவர், உங்கள் வீட்டின் கதவு திறந்து கிடக்கிறதே என்று கூறியுள்ளார். அதைக்கேட்டதும் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், நன்னிலம் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார்.
பீரோ உடைப்பு
தகவல் அறிந்ததும் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சுகுணா, பேரளம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டின் முன்புற வாசல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின்புற கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
50 பவுன் நகைகள் - ரூ.2 லட்சம் கொள்ளை
கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் ராக்சியும் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்துசிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 
கொள்ளை நடந்த வீட்டில் 50 பவுன் நகைகளும், ரூ.2 லட்சமும் வைத்திருந்ததாக வீட்டின் உரிமையாளர் பாலமுருகன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். 
என்ஜினீயர் பாலமுருகன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டதை நன்கு அறிந்த மர்ம மனிதர்கள் இரவில் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த நகை - பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது. என்ஜினீயர் கூறியது உண்மையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், நகை&பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
பூட்டிக்கிடந்த என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story