பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி நடனமாடிய இளம்பெண்கள்
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் விபத்து நடந்த இடத்தில், காரை நிறுத்தி இளம்பெண்கள் நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
பெங்களூரு:
2 பேர் சாவு
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் உள்ள லை&பே பகுதியில் கடந்த 14-ந் தேதி, மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபர், இளம்பெண் மீது வேகமாக வந்த கார் மோதியது. இதில் மேம்பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் விழுந்து 2 பேரும் உயிர் இழந்தனர். விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பிரீத்தம்குமார், அவரது தோழி கிருத்திகா என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேம்பாலத்தில் உள்ள லை-பே பகுதியில் தேவையின்றி வாகனங்களை நிறுத்த கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தும், அங்கு ஏராளமானோர் வாகனங்களை நிறுத்துவதாக கூறப்படுகிறது.
நடனமாடிய இளம்பெண்கள்
இந்த நிலையில் மேம்பாலத்தில் ஒரு காரில் 2 இளம்பெண்களுடன் வந்த 4 வாலிபர்கள் காரை லை-பே பகுதியில் நிறுத்தினர். பின்னர் விபத்து நடந்த இடத்தில் வாலிபர்களும், இளம்பெண்களும் நடனமாடியதுடன், தாங்கள் நடனம் ஆடியதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும் தெரிகிறது.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துறையில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி கூறும்போது, ''எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் தேவையின்றி வாகனங்களை நிறுத்த கூடாது என்று கூறியுள்ளோம். ஆனால் அதையும் மீறி வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி வாலிபர்கள், இளம்பெண்கள் நடனமாடியது குறித்து எங்கள் கவனத்திற்கு வந்து உள்ளது. அந்த காரின் பதிவெண், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காரின் உரிமையாளரை வரவழைத்து விளக்கம் கேட்கப்படும். அவர் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
Related Tags :
Next Story