முன்னாள் நீதிபதி மோகன் சாந்தனகவுடரின் பாதையில் இளம் வக்கீல்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் - பசவராஜ் பொம்மை பேச்சு
முன்னாள் நீதிபதி மோகன் சாந்தனகவுடர் ஏற்படுத்தி கொடுத்த பாதையில் இளம் வக்கீல்கள் முன்னோக்கி செல்ல வேண்டும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சாதனைகளை மறக்க முடியாது
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று கர்நாடக வக்கீல்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த மோகன் சாந்தனகவுடரின் சாதனை தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், முதல்&மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
மோகன் சாந்தனகவுடர் கீழ் மட்டத்தில் இருந்து வளர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகி இருந்தார். நீதிபதியாக இருந்த போது கூட ஒரு சாதாரண மனிதர் போல் தான், அவர் இருந்தார். அவர் தற்போது நம்முடன் இல்லை. அவர் செய்த சாதனைகளை நம்மால் மறக்க முடியாது. ஒருவரின் இறப்புக்கும், சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இளம் வக்கீல்கள் முன்னோக்கி...
எந்த வழக்காக இருந்தாலும், அதில் மோகன் சாந்தனகவுடர் சரியான நீதியை வழங்கி, நீதித்துறைக்கே பெருமை சேர்த்திருந்தார். மோகன் சாந்தனகவுடர் நம்முடன் இல்லை என்றாலும், அவர் செய்த சாதனைகள் எப்போதும் நம்முடன் உயிர்ப்புடன் இருக்கும். மோகன் சாந்தனகவுடர், எனது தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். உப்பள்ளிக்கு வரும் போது எங்களது வீட்டுக்கு வருவார். சோளம் ரொட்டி சாப்பிட்டு விட்டு தான் செல்வார். சாதாரண வக்கீலாக இருந்து நீதிபதியாக பதவி உயர்வு பெற்றிருந்த போதும் கூட, அவர் தன்னை ஒரு போதும் மாற்றிக் கொண்டது கிடையாது.
ஒவ்வொரு வக்கீல்களும் எப்படி இருக்க வேண்டும் என்று தனியாக பாதையை ஏற்படுத்தி கொடுத்தவர். மோகன் சாந்தனகவுடர் ஏற்படுத்தி கொடுத்த வழிகாட்டுதல்கள், பாதையில் இளம் வக்கீல்கள் முன்னோக்கி செல்ல வேண்டும். அவரது வழிகாட்டுதல்களை இளம் வக்கீல்கள் பின்பற்றி அடுத்த கட்டதற்கு தங்களது குறிக்கோள்களை எடுத்து செல்ல வேண்டும். அவர் வகுத்து கொடுத்த பாதையில் செயல்பட்டால், அது நமது வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளான ஏ.எஸ். போப்பண்ணா, நஜீர், ஏ.எஸ்.ஓகா, பி.வி.நாகரத்னா, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஸ் சந்திரசர்மா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story