தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகள் ஊடகங்களை சந்திக்க தடை - கர்நாடக அரசு உத்தரவு
தனிப்பட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகள் ஊடகங்களை சந்திக்க தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
சட்டசபையில் பிரச்சினை
மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நாள்தோறும் ஊடகங்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தனிப்பட்ட காரணங்களாக அவர்கள் ஊடகங்களை சந்திக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்தூரி, சமீபத்தில் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சா.ரா.மகேஷ் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சினை, சட்டசபையிலும் எதிரொலித்தது. அதாவது ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி மற்றும் சா.ரா.மகேஷ் இந்த பிரச்சினையை எழுப்பி பேசினார்கள். அப்போது அவர்கள், அரசு அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக ஊடகங்களை சந்திக்க அனுமதி கொடுத்தது யார்?. ரோகிணி சிந்தூரி மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்காததது ஏன்? என்று பிரச்சினையை எழுப்பினர்.
ஊடகங்களை சந்திக்க தடை
இந்த நிலையில், அரசு அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக ஊடகங்களை சந்திக்கக்கூடாது என்று கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், சலுகைகள் பற்றி மட்டும் ஊடகங்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களாக அரசு அதிகாரிகள் ஊடகங்களை சந்திக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களை மட்டும் அரசு அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் தனியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story