கர்நாடகத்தில் இன்னும் 3 மாதத்திற்குள் அனைவருக்கும் ஆயுஷ்மான் சுகாதார அட்டை - மந்திரி சுதாகர் பேட்டி
கர்நாடகத்தில் அனைவருக்கும் இன்னும் 3 மாதத்திற்குள் ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்படும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
3 மாதத்திற்குள் சுகாதார அட்டை
கர்நாடகத்தில் ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 1½ கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் இன்னும் 3 மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் வசிக்கும் அனைவருக்கும் ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயுஷ்மான் சுகாதாத அட்டை வழங்குவதே சுகாதாரத்துறையின் முதல் குறிக்கோளாகும்.
அதன்படி, இன்னும் 3 மாதத்திற்குள் 2½ கோடி ஆயுஷ்மான் சுகாதார அட்டை வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி முதல்-மந்திரி மற்றும் பிரதமராகி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதியுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்றில் (அதாவது நேற்று முன்தினம்) இருந்து அடுத்த மாதம் 2-ந் தேதி வரை மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சட்டசபையில் தக்க பதிலடி
அதன்படி, உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி, பிற மந்திரிகள் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். உயிர் இழக்கும் ஒரு நபர், 8 உறுப்புகளை தானம் செய்து, 8 பேருக்கு வாழ்க்கை கொடுக்க முடியும். இதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசு மற்றும் சுகாதாரத்துறையின் கடமையாகும்.
மாநிலத்தில் கொரோனா 3-வது அலை உருவாகாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதுவரை 2 முறை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வது பற்றியும் எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. கொரோனா விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைக்கு சட்டசபையில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி சுதாகர் தெரிவித்துளளார்.
Related Tags :
Next Story