பெங்களூருவில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு
பெங்களூருவில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பயணிகள் கோரிக்கை
பெங்களூருவில் மெட்ரோ ரெயில்கள் ஓடுகின்றன. பெங்களூருவில் கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரையும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனபுரா வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாகவும், இரவு நேர ஊரடங்கு காரணமாகவும் தற்போது மெட்ரோ ரெயில்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரையே இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாலும், மற்ற அரசு, தனியார் பஸ்கள் நள்ளிரவு வரை இயக்கப்படுவதாலும், மெட்ரோ ரெயில் சேவையின் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினார்கள்.
அதாவது மெட்ரோ ரெயில் சேவையின் நேரத்தை இரவு 8 மணியுடன் நிறுத்துவதற்கு பதிலாக இரவு 11 மணிவரை நீட்டிக்க வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதே கருத்தையே பெங்களூருவை சேர்ந்த பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்களும் வலியுறுத்தி வந்தனர். முதல்&மந்திரி பசவராஜ் பொம்மையின் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது.
இரவு 10 மணிவரை நீட்டிப்பு
இதையடுத்து, பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையின் நேரத்தை நீட்டிப்பது குறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு நேற்றில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவையின் நேரத்தை இரவு 10 மணிவரை நீட்டிப்பு செய்திருப்பதற்கு பயணிகள் வரவேற்றுள்ளனர். தனியார், அரசு நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா விதிமுறைகளை பயணிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story