மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
தக்கலை அருகே சிகரெட் வாங்குவது போல் நடித்து மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே சிகரெட் வாங்குவது போல் நடித்து மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை பறிப்பு
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை கவியலூர் பகுதியை சேர்ந்தவர் ரெவீந்திரதாஸ். இவருடைய மனைவி சாரதா (வயது 60). வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த சாரதாவிடம், சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.
உடனே அவர் சிகரெட்டை எடுக்க முயன்றார். அந்த சமயத்தில் திடீரென மர்மநபர்கள், சாரதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்தனர். திடுக்கிட்ட அவர் திருடன்...திருடன் என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள், கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
மர்மநபர்கள் கைவரிசை
இதுகுறித்து சாரதா தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி மர்மநபர்களை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story