தமிழக கவர்னர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்?-சேலத்தில் தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழக கவர்னர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்?-சேலத்தில் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 18 Sep 2021 10:52 PM GMT (Updated: 18 Sep 2021 10:52 PM GMT)

தமிழக கவர்னர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? என்று சேலத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறினார்.

சேலம், செப்:
தமிழக கவர்னர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? என்று சேலத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறினார்.
தொல்.திருமாவளவன் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் சேலத்தில் நேற்று தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு மாணவர்களை மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. மாணவி அனிதாவில் தொடங்கி தற்போது சவுந்தர்யா வரை பலரை நாம் பலிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த மாணவி அனுசியா நீட் தேர்வு எழுதிய பின்னர் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்துள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு மருத்துவ செலவை தமிழக அரசு வழங்க வேண்டும்.
கருப்பு கொடி
ஜனாதிபதி விரைவாக தமிழக அரசு சட்டபேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட்டு சட்டமாக்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற 20-ந் தேதி (நாளை) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மோடி அரசை கண்டித்து நடைபெறும் இந்த அறவழி போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். 
தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அவர் மத்திய உளவுப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் என்றும், மக்களை பிளவுப்படுத்தி சூழ்ச்சிகளை கையாளக் கூடியவர் என்றும், நாகலாந்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் உள்பட பலர் போராட்டங்களை நடத்தியதாகவும் தகவல்கள் வந்தன. அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
உடன்பாடு இல்லை
எனவே தான் அவரை தமிழக கவர்னராக நியமிக்க கூடாது என்றும், திரும்ப பெற வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை பிரதமர் மோடி நிராகரித்துவிட்டார். மேலும் அவர் பதவியேற்பு விழாவிற்கு கலந்துகொள்ள எம்.பி. என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் கவர்னராக ஆர்.என். ரவியை நியமித்ததில் மாற்றுக்கருத்து கொண்டவன். இந்த சூழ்நிலையில் அந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் தான் நான் கலந்து கொள்ளவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட ஊழல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வருகிறது. ஆதாரம் இல்லாமல் அரசியல் நோக்கத்திற்காக பழிவாங்கும் நடவடிக்கை என்றால் அ.தி.மு.க. தரப்பில் பெரும் போராட்டம் வெடித்திருக்கும். ஆனால் அ.தி.மு.க. கட்சியில் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் எழவில்லை. 
சமூக நீதி அரசு
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒட்டுமொத்தத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எதிர்க்கிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அந்தந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எங்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் பேச தொடங்கி விட்டனர். இதில் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை கேட்டு பெற்று தேர்தலில் போட்டியிடுவோம். தி.மு.க. சிறப்பாக நல்லாட்சி நடத்தி வருகிறது. மேலும் இது ஒரு சமூக நீதி அரசாகும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

Next Story