மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்து நகை-பணம் கொள்ளை


மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Sept 2021 2:40 PM IST (Updated: 19 Sept 2021 2:40 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அம்பத்தூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அலிமா பீவி (வயது 80). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவரது 3 மகன்களுக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். மூதாட்டி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

அவரது 3-வது மகன் தினமும் தனது வீட்டில் இருந்து தாயாருக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் தாயாருக்கு உணவு கொண்டு வந்தபோது, அலிமா பீவி வீட்டின் உள்ளே மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாயாருக்கு முதலுதவி அளித்த பிறகு அவரிடம் விசாரித்தார். அதில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரது பேச்சில் மயங்கிய நான், அந்த பெண் கொடுத்த பாயாசத்தை வாங்கி சாப்பிட்டது மட்டும் நினைவு இருப்பதாகவும், பின்னர் மயங்கி விட்டதாகவும் கூறினார்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரூ.60 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அலிமா பீவிக்கு மர்ம பெண், மயக்க மருந்து கலந்த பாயாசத்தை கொடுத்து, அவர் மயங்கியதும் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

Next Story