அனகாபுத்தூரில் முதியவர் அடித்துக்கொலை
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். எலெக்ட்ரீசியன். இவருடைய மாமனார் ராஜேந்திரன்(வயது 70). சம்பவத்தன்று இவர், இவர்களது எதிர் வீட்டில் வசிக்கும் சீனிவாசன்(54) என்பவரது வீட்டின் முன்புறம் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், முதியவர் ராஜேந்திரனை ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ராஜேந்திரன், சீனிவாசனை கையால் அடித்தார். அதற்கு சீனிவாசன், பதிலுக்கு கீழே கிடந்த கட்டையால் முதியவர் ராஜேந்திரனை தாக்கினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த முதியவர், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி சங்கர் நகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, சீனிவாசனை கைது செய்தனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சீனிவாசன் மீது பதிந்திருந்த கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story