தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி மாமல்லபுரம் வருகை


தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி மாமல்லபுரம் வருகை
x
தினத்தந்தி 19 Sept 2021 4:28 PM IST (Updated: 19 Sept 2021 4:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாமல்லபுரத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்தார். அங்கு அவர் உலக புராதன சின்னமான கடற்கரை கோவிலை கண்டு களித்து ரசித்தார்.

கடற்கரை கோவிலுக்கு வருகை

நாகாலாந்து கவர்னராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக மாற்றப்பட்டார். அவர் நேற்று சென்னையில் தமிழக கவர்னராக பதவி ஏற்று கொண்டார். தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்று கொண்ட முதல் நாளான நேற்று தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடற்கரை கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகம் வழங்கப்பட்டது.பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கண்டு ரசித்தார்.

நந்தி சிலைகள்

கடற்கரை கோவிலின் 2 கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். பிறகு அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் பார்வையிட்டார். பிறகு கடற்கரை கோவில் வளாகத்தில் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்கான சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் கடற்கரை கோவில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடல் ஓரத்தில் பல 100 ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோவில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

கடற்கரை கோவிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் குடும்பத்துடன் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். கவர்னர் வருகையையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோவில் சாலை பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரை கோவிலுக்கு கவர்னர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் கடற்கரை கோவிலை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு 1 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. கவர்னருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் அலுவலர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.


Next Story