பிரபல ரவுடிகள் 3 பேர் கைது


பிரபல ரவுடிகள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 6:29 PM IST (Updated: 19 Sept 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிரபல ரவுடிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரபல ரவுடிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், முதல்நிலை காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி, வள்ளிநாயகம் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது தூத்துக்குடி பொன்னகரம் டாஸ்மாக் கடை முன்பு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த தூத்துக்குடி பூபல்ராயபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் ராஜ் என்ற டெரன்ஸ் ராஜ் (வயது 30), அகமது கணி மகன் ஜான் வாஸ் (31) மற்றும் டேனியல் மகன் ரூபன் ஜோஸ்வா (19) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில், அவர்கள் அந்த பகுதியில் வந்த ஒருவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜ் என்ற டெரன்ஸ் ராஜ் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 9 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகளும், ஜான் வாஸ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி உட்பட 6 வழக்குகளும், ரூபன் ஜோஸ்வா என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story