விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் மாயமான வழக்கில் 4 பேர் கைது


விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் மாயமான வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2021 6:30 PM IST (Updated: 19 Sept 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார், கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து மாயமான வழக்கில் சென்னையை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பறிமுதல் செய்த கார் மாயம்

கும்மிடிப்பூண்டி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 37) என்பவர் மீது எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.சம்பவ இடத்தில் இருந்து டிரைவர் தப்பி ஓடிய நிலையில், அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.இந்த நிலையில், 15-ந் தேதி நள்ளிரவு கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து திடீரென அந்த கார் மாயமானது. இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

போலீஸ் விசாரணையில், சென்னை மதுரவாயலை சேர்ந்த பெண் ஒருவரிடம் காரை லீசுக்கு எடுத்த சிலர் அந்த காருக்கு மாத தவணை செலுத்த முடியாத நிலையில் பைனான்சியரிடம் இருந்து தப்பிக்க அந்த காரின் பதிவெண்ணை மாற்றம் செய்து ஓட்டி வந்து உள்ளனர்.இந்த நிலையில் போலியான பதிவெண்னுடன் கூடிய அந்த கார் விபத்து வழக்கில் சிக்கியது. இதனால் காரை லீசுக்கு எடுத்து ஓட்டிய நபர்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து அந்த காரை நள்ளிரவில் போலீஸ் நிலையத்தில் இருந்து அவர்கள் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக காரை லீசுக்கு எடுத்து ஓட்டிய போரூரை சேர்ந்த தனஞ்செழியன் (வயது 46), அவரது மகன் கிருஷ்ணா (24), அம்பத்தூரை சேர்ந்த சதாம் உசேன் (23), நசரய்யா ஆகியோரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story