கூடலூர் பகுதியில் பழுதடைந்த பஸ்களால் பொதுமக்கள் அவதி
கூடலூர் பகுதியில் பழுதடைந்த பஸ்களால் பொதுமக்கள் அவதி
கூடலூர்
கூடலூர் பகுதியில் பழுதடைந்த பஸ்களால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பழுதடைந்த பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூடலூர் கிளை அலுவலகம் மூலமாக சுமார் 45 பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும், கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பழுதடைந்த பஸ்களில் பயணிகள் மழையில் நனைந்தபடி பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது.
சிலர் குடைகளை பிடித்தவாறு செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ்கள் கூடலூர் பகுதியில் இயக்கப்பட்டது. ஆனால் தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் புதிய பஸ்களும் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது.
பொதுமக்கள் தள்ளினர்
இந்த நிலையில் கூடலூரில் இருந்து தேவர்சோலை வழியாக தேவன் பகுதிக்கு அரசு பஸ் நேற்று முன்தினம் சென்றது. பகல் 3 மணிக்கு தேவர்சோலை பஸ் நிலையத்தில் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக அரசு பஸ் வந்து நின்றது.
வழக்கம்போல பொதுமக்கள் பஸ்சில் அமர்ந்து கூடலூருக்கு பயணம் செய்ய இருக்கையில் அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து கூடலூருக்கு புறப்படுவதற்காக டிரைவர் பஸ்சை இயக்க தொடங்கினார். ஆனால் பஸ்சை இயக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சில் இருந்து இறங்கி சிறிது தூரம் தள்ளினர். அதன் பின்னர் பஸ் ஸ்டார்ட் ஆனது. இதையடுத்து பயணிகளுடன் கூடலூர் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் அரசு பஸ்கள் நடுவழியில் செயல்படாமல் நிற்பதால் கூடலூர் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழுதடைந்த பஸ்களை சீரமைக்க வேண்டும். மேலும் புதிய பஸ்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story