கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் படுகாயம்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் படுகாயம்
கூடலூர்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
காட்டு யானை தாக்கியது
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாலை மற்றும் இரவில் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வாச்சிக்கொல்லி பகுதியை சேர்ந்த மாறன் மகன் வாசு (வயது 28) என்பவர் தனது உறவினருடன் நேற்று முன்தினம் மாலை மண்வயல் பஜாருக்கு சென்றார்.
பின்னர் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து உறவினருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆள வயலில் இருந்து வாச்சிக்கொல்லிக்கும் இடையே மறைந்திருந்த காட்டு யானைகள் அவர்களை துரத்தியது.
இதைதொடர்ந்து வாசுவும் அவரது உறவினரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் ஒரு காட்டு யானை வாசுவை தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காட்டு யானையை விரட்டினர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
தகவலறிந்த காட்டு யானை விரட்டும் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து பலத்த காயம் அடைந்த வாசுவை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாசுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் படுகாயமடைந்த வாசுவை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story